Description
மறுபிறவி சம்பவங்கள் சினிமா படம் எடுப்பதற்கும் கதை எழுதுவதற்கும்தான் லாயக்கு, அவை உண்மையா பொய்யா என்பதைப் பற்றியெல்லாம் ஏன் கவலைப் படவேண்டும், எத்தனையோ மூடநம்பக்கைகளில் அதுவும் ஒன்று என்று நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். நான் இந்து மதத்தவன் என்று பள்ளிச் சான்றிதழ்களில் குறிப்பிட்டுக் கொள்பவர்கள், அதன் அடிப்படைத் தத்துவமான மறுபிறவிக் கொள்கையைப் பற்றி அக்கறை கொள்வதில்லை.
விஞ்ஞானிகளும் மறுபிறவிகளின் மீது அக்கறை காட்டுவதில்லை. இது மந்திர, தந்திர வகை ஆராய்ச்சிகளாகப் போய்விடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மேலும் பல்கலைக்கழகங்களும், ஆய்வுகளுக்கு நிதி நல்கும் நிறுவனங்களும் டெக்னாலஜி ஆராய்ச்சிகளுக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றன. விஞ்ஞானிகளும் வேறு வழியில்லாமல் அதையே தமது குறிக்கொள்களாகக் கொள்கிறார்கள்.
திடுதிப்பென்று மறுபிறவி, ஆவி போன்ற சமாச்சாரங்களில் ஆராய்ச்சி செய்ய முற்படுவதும் சிரமமானது. இது சம்மந்தமான ஆய்வுகளை வழிநடத்தும் தக்க வழிகாட்டிகளும் உலகில் குறைவே. இப்படி பல காரணங்களால் மறுபிறவியைப் பற்றி விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகள் அரிதாகி விட்டன. நல்ல வேளையாக முற்றிலும் இல்லாமல் போய்விடவில்லை. உலகில் இங்கொன்றும் அங்கொன்றுமாக உளவியல் ஆய்வாளர்கள் சிலர், மறுபிறவியைப் பற்றி முனைப்பாக ஆராய்கிறார்கள்.
நான் நேரடியாக இந்த ஆராய்ச்சியில் இறங்காவிட்டாலும், இது பற்றிய ஆய்வுகளைப் பல ஆண்டுகளாகக் கூர்ந்து கவனித்துக் கொண்டு வந்தேன். அவற்றைத் திரட்டி இந்த நூலில் வழங்குகிறேன். முடிந்தவரை வேதாந்த சித்தாந்த கருத்துகளை இதில் கலக்காமல் முழுக்க முழுக்க கள ஆய்வுகளின் அடிப்படையில் தக்க புள்ளிவிவர கணக்கைப் பயன்படுத்தி பிரசித்தி பெற்ற அறிவியல் ஆய்வு இதழ்களில் வெளியான கட்டுரைகளைப் பின்பற்றி இந்த நூலை எழுதியிருக்கிறேன்.
உயிரியல் துறையில் 40 ஆண்டுகளாக ஆய்வுகளும் பயிற்றுவித்தலும் செய்து வருவதால் நானும் மறுபிறவி சம்பவங்களைச் சந்தேகத்துடன்தான் பார்த்துவந்தேன். ஒரு தலைப்பட்ங்ம் இல்லாமல் எதையும் ஆராயவேண்டும் என்பது நல்ல ஆய்வாளருக்கான தகுதி என்பதால் நானும் முன்கூட்டி எந்த பாரபட்சமும் கொள்ளமால் தகவல்களைப் பரிசீலித்து மறுபிறவியைப் பற்றிய முடிவுக்கு வந்தேன்.
மறுபிறவி நிஜம், இதில் துளிகூட சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. இந்த நூலைப் படித்து முடித்ததும் நீங்கள் இந்த முடிவுக்கு வர நேரிடும். நமது பௌதிகம் மற்றும் அணு பௌதிக ஆய்வுகள் இந்தப் புதிய கண்ணோட்டத் தோடு ரியாலிட்டியைப் பார்த்தால் முடிவுக்கு வரமுடியாமல் திணரும் சிக்கல்களுக்குத் தீர்வுகள் கிடைக்கும். என்னுடைய இனம், என் ஜாதி, என் சமயம் என்று அவற்றின்மீது அலாதியான பற்றும் வெறியும் கொண்டிருப் பவர்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும், எதுவுமே சாசுவதம் இல்லை. மனிதர்கள் பல பிறவி எடுக்கிறார்கள்; ஒன்றில் உயர்குலம், அடுத்ததில் தாழ்ந்த குலம், ஒன்றில் ஆண் அடுத்ததில் பெண்; இப்படி மாறி மாறி பிறக்க நேரிடுகிறது. கோடி கோடியாய்ச் சொத்து சேர்த்து மகிழ்ந்தவன் அடுத்த பிறவியில் பிச்சை எடுக்கிறான்.
இந்த நூலுக்கு உறுதுணையாக இருந்த ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோள் நூல் பட்டியலில் வழங்கியிருக்கிறேன். ஆய்வாளர்களின் கடின உழைப்பால் பெற்ற ஒளிப்படங்களைப் பயன்படுத்தியிருக்கிறேன்.
– ஆசிரியர்
பேரா. க. மணி
Reviews
There are no reviews yet.